மின்மாற்றி இல்லாததால் 15 நாட்களாக இருளில் தவிக்கும் கிராம மக்கள்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கோசுகுறிச்சி ஊராட்சி சீகம்பட்டியில் உள்ள மின்மாற்றியில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மின்வாரியத்தினர் டிரான்ஸ்பார்மரை எடுத்துச் சென்றநிலையில் இதுவரை டிரான்ஸ்பார்மர் வைக்கப்படாமல் உள்ளதால் சீகம்பட்டி, மலம்பட்டி கிராமங்கள் மின்சாரம் இன்றி இரவு நேரங்களில் மக்கள் இருளில் தவிக்கின்றனர். வேளாண்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சமுடியாமல் கோடை வெய்யிலால் கருகும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து மின்விநியோகம் செய்யவேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.