திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மீனா(67). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மலைக்கோட்டை வடக்கு மேட்டு தெருவைச் சேர்ந்த நாகலட்சுமி(38) என்பவர் மீனாவிற்கு உதவியாக அவரது வீட்டு வேலைகளை செய்து வந்ததாகவும், அவ்வப்போது மீனாவுடன் தங்கி விட்டு செல்வது வழக்கமாம்.
இதேபோல் நேற்று காலை மீனாவின் வீட்டில் தங்கி இருந்து விட்டு நாகலட்சுமி காலை 7 மணிக்கு வெளியில் சென்றுள்ளார். பின்னர் மீனா வீட்டில் வைத்திருந்த நகையை தேடியபோது அவரது 5 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து மீனா கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிவு செய்து நாகலட்சுமியை கைது செய்து, அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.