மணப்பாறையில் காவல்நிலைய வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
திருச்சி, நவ.13 மணப்பாறையில் போலீஸ் நிலையம் வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்துக் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார் (26). இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடன் பெற்று அந்த கடன் தொகையை மோகன்குமார் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனையால் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் மோகன்குமார் கடனை செலுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் பிரச்சனை தொடர்பாக அவரது மனைவி சாந்தி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கணவன் – மனைவி இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு நாளை வர அறிவுறுத்தி அனுப்பி உள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்ற மோகன்குமார் போலீஸ் நிலைய வளாகத்திலேயே கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டு சாய்ந்து விட்டார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தொழிலாளி கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நிலைய வளாகத்தில் தொழிலாளி கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.