கொரோனாவை விரட்ட துறையூர் அருகே கிராம மக்கள் செய்த வினோத ஏற்பாடு
திருச்சியில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று மட்டும் திருச்சியில் புதிதாக 689 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாவட்டம் தோறும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இது ஒருபுறமிருக்க திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த மக்கள் விநோத முறையை கடைபிடிக்கின்றனர்.தங்கள் வீடுகளுக்கு முன்பு மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு ஒரு தம்ளரில் மஞ்சள் நீரை நிரப்பி அதில் வேப்பிலையை சொறுகி வைத்துள்ளனர். இது குறித்துஅப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில் இவ்வாறு செய்தால் கொரோனா பரவாது என ஒரு சிலர் கூறியதை கேட்டு அதன்படி செய்துள்ளோம்என வெள்ளந்தியாக கூறுகின்றனர்.மஞ்சள்,வேப்பிலை கிருமி நாசினிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் அது குறித்த எந்த விழிப்புணர்வும் இப்பகுதி மக்களுக்கு இல்லை.மேலும் இவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை எனவும் இப்பகுதியில் தடுப்பூசி முகாம்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை எனவும் கூறுகின்றனர் .