திங்கள்கிழமை முதல் காந்தி மார்க்கெட் திறப்பு – தடுப்பூசி போட்டு கொண்ட வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி
தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். அந்த வகையில் கடந்த மாதம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக மேலப்புலிவார் ரோடு பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலைல் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கூட காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வந்தது. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வியாபாரிகளுக்கு மட்டுமே காந்தி மார்க்கெட்டில் அனுமதி எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோரை திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜுலு, கமலக்கண்ணன் காந்தி மார்க்கெட் திறப்பு குறித்து வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில்…. “காந்தி மார்க்கெட் வரும் திங்கட்கிழமை முதல் திறக்க அனுமதி வழங்க உள்ளதாகவும், வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் மொத்த வியாபாரம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெறும் என்றும், திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை சில்லறை விற்பனை நடைபெறும் என்றும், 2 மணி முதல் மாலை 5 மணி வரை காந்தி மார்க்கெட் தூய்மை பணிகள் நடைபெறவுள்ளது. இதையே தொடர்ச்சியாக நடைபெறும்” என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.
காந்தி மார்க்கெட்டுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்வதில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வியாபாரிகளுக்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.