துபாயில் தாயை இழந்து தவித்த கைக்குழந்தை – திருச்சி விமான நிலையத்தில் தந்தையுடன் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்

0 732
Stalin trichy visit

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் வேலன் (38) – பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இதில் முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக இறந்துள்ளது.

 

இந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக தவித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வேலை தேடி மனைவி பாரதி மற்றும் மூன்றாவது கைக்குழந்தை தேவேஷ் உடன் துபாய்க்குச் சென்று உள்ளார். அங்கு ஒரு மாத காலமாக வீட்டு வேலை செய்து வந்த நிலையில் கடந்த மே மாதம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மே 29ம் தேதி கொரனோ தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தாய் பாரதி உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை தேவேஷ் துபாயில் தவித்து வந்துள்ளது. இதனை அறிந்த துபாய் திமுக நகர அமைப்பாளர் எஸ்.எஸ் முகமது மீரான் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளார். மேலும் தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து துபாயிலிருந்து கைக்குழந்தை பயணி ஒருவரின் உதவியுடன் இன்று மாலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் இருந்து கணவர் வேலனும் திருச்சி விமானநிலையத்திற்கு வந்து தன்னுடைய குழந்தையை கட்டியணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

Leave A Reply

Your email address will not be published.