மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மாயனூர் கதவணையை வந்தடைந்து
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து சென்று கொண்டிருக்கிறது. விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீரானது சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. காலை 4 மணி நிலவரப்படி 2760 கன அடி தண்ணீர் விநாடிக்கு வந்த நிலையில் காலை 10 மணியளவில் விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்று கொண்டுள்ளது. திருச்சி மாவட்டம் முகொம்புக்கு நாளை அதிகாலை சென்றடையும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.