“கடவுள் இருக்கான் குமாரு” 10 ரூபாய் ஆன திருவானைக்காவல் புளியோதரை!
திருச்சி திருவானைக்காவல் கோவிலில் விற்கப்படும் பிரசாதத்தின் விலை மிக அதிகமாக உள்ளதை நாம் ஆதாரப்பூர்வமாக அறநிலைய துறை ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திருச்சி மெயில் இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தோம். இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மேற்படி பிரசாதத்தின் விலை 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் கன்டெய்னர்களை பயன்படுத்த கூடாது என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்கூரிய ஸ்தலமாக இருப்பது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரன்- அகிலாண்டேஸ்வரி திருத்தலம் ஆகும். இந்த கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்கி சாப்பிடுவது மட்டும் இன்றி வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் இருந்தே அறுசுவையாகிய ஒன்றாக இருந்து வருகிறது.
தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.குறிப்பாக மிக சிறிய பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை ரூ.40 எனவும், சர்க்கரை பொங்கல் ரூ.40 எனவும், வடை ரூ.10 எனவும் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது வேதனையளிக்கும் ஒன்றாக இருந்து வந்தது. பல பக்தர்கள் முணுமுணுத்துக் கொண்டு அதே இடத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து சென்றனர்.

இந்த நிலையில் திருச்சி மெயில் இணையதளம் சார்பாக திருவானைக்கோவில் பிரசாதத்தைப் பற்றியும் அங்கு நடக்கும் பின்புலத்தையும் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டோம். இதை தொடர்ந்து தற்போது திருக்கோவில் பிரசாதத்தை தொன்னையில் ரூபாய் பத்து என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்க திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. அதே வேளையில் எப்படி இதற்கு முன்பு திருக்கோவில் பிரசாதங்களான புளியோதரை, சர்க்கரை பொங்கல் 40 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு ஒரு சுவாரஷ்ய பதில் வருகிறது. அதாவது ஒரு கரண்டி பிரசாதம் பத்து ரூபாயாம். மூன்று கரண்டி சேர்ந்தது ஒரு பிளாஸ்டிக் பாக்சில் நாற்பது ரூபாய்க்கு அடைத்து விற்க்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இயல்பான கேள்வி நமக்கு எழுகிறது. அது எப்படி ஒரு கரண்டி பிரசாதம் பத்து ரூபாய் என்றால் மூன்று கரண்டி பிரசாதம் 30 ரூபாய் தானே விற்கவேண்டும் என்பது தான் அந்த கேள்வி. ஆனால் பிரசாதத்தை அடைத்து விற்கும் பாக்சின் விலை பத்தையும் சேர்த்தால் கணக்கு நேராகிறது என நமட்டு சிரிப்பு சிரிக்கின்றன திருக்கோவில் உள் விவகாரங்களை நன்கறிந்தவர்கள்.இருப்பினும் கோவில் பிரசாதத்தை வாங்கி வெளியில் எடுத்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது வரவேற்கத்தக்க ஒன்றாகவே அமைகிறது.

மேலும் இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு மக்கள் நீதி மைய மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார் கூறுகையில்… இனி திருக்கோவிலில் பிரசாதம் பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது மகிழ்ச்சி என்று நாம் கடந்து சென்று விட முடியாது. ஏனெனில் ஒரு தொன்னையின் அளவு என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த அளவிற்கு பத்து ரூபாய் அதிகமா, குறைச்சலா என்றால் மூன்று ரூபாய்க்கு பெரும் என்பதே நிதர்சனம். மேலும் பத்து ரூபாய் மதிப்பிலே சற்று அதிக அளவில் பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. மேலும் பிரதானம் உண்ணும் பக்தர்கள் வயிறு நிறைய வேண்டாம் சார், ஆனால் மனது நிறைவது தான் தர்மம். திருக்கோவில் கடந்த முதல் ஆடி வெள்ளியன்று மட்டும் பிரசாதம் விற்ற வகையில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் திருக்கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளது என விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் முதல் ஆடி வெள்ளியன்று பிரசாதத்திற்கு தயாரிக்கப்பட்ட புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் மிச்சமாகியுள்ளது. ஆனால் மிச்சமான பொருட்களை தானமாக விநியோகிக்கப்பட வேண்டிய பிரசாதத்தை, கோவில் நிர்வாகம் மறுநாள் பிரசாத ஸ்டாலில் பழைய பிரசாதத்தை பக்தர்களுக்கு விற்க்கப்பட்ட உச்சகட்ட கொடுமையும் நடந்துள்ளது. மேலும் “திருக்கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் அரிசி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருக்கோவில் அன்னதானத்திற்கு கோவில் நிர்வாகம் பயன்படுத்தாமல் பக்தர்களுக்கு விற்க்கப்படும் பிரசாத விற்பனைக்காக பயன்படுத்தபடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்” என்றார்.

ஒருபுறம் பிரசாதத்தின் விலையை குறைத்த கோவில் நிர்வாகம் திருக்கோவில் நிர்வாகத்தில் நடக்கும் பல்வேறு இன்னல்களையும் இனிவரும் காலங்களில் சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன அமைதிக்காக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் மன அமைதிக்கு குந்தகம் நேராமல் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியது காலத்தின் தேவை என பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேண்டுகோளை முன் வைக்கின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8