திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு
திருச்சி, ஆக.24 திருச்சியில் குடும்பத்தினர் மாடியில் தூங்கிய போது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 16½ பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது 43). இவர் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் குடும்பத்தினருடன் சென்று தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் வெளியே பூட்டப்பட்டிருந்த கிரில்கேட் மற்றும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்குள்ள அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். மறுநாள் காலை ரத்தினகுமார் கீழே உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.