திருச்சியில் 17 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் : இருவர் கைது

0 43
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  திருச்சியில் 17000 போதை மாத்திரைகள், பட்டாக்கத்தி, ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல் இருவர் கைது.

 திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளின் புழக்கம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

குறிப்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திருச்சியையே உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருச்சி பெரிய கடைப் பகுதியில் உள்ள கணேஷ் பாண்டியன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் பதுக்கப்பட்டு, விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கணேஷ் பாண்டியனின் வீட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த சோதனையில் போலீசார் கண்டெடுத்த பொருட்கள் ஒட்டுமொத்த திருச்சியையும் அதிரவைத்துள்ளது.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,500 போதை மாத்திரைகள் 5 பயங்கர பட்டாக்கத்திகள், 4 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப், 1 இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 1,00,550 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடைய வீட்டின் உரிமையாளர் கணேஷ் பாண்டியன், மற்றும் அவருக்கு வலது கரமாக செயல்பட்டு வந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மாத்திரைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் இருக்கும் பெரிய புள்ளிகள் யார்? திருச்சி முழுவதும் யாருக்கெல்லாம் இவை விநியோகம் செய்யப்பட இருந்தன? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

17,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சம்பவம் திருச்சி மாநகர மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.