புகையிலைப் பொருட்களை விற்ற 3 பேர் கைது
திருச்சி, நவ.15 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பெரம்பலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு ஒரு நபர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா இ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு கைது செய்து அவரிடமிருந்து 2,500 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
இதேபோன்று காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தஞ்சை ரோடு டீக்கடை அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 30, என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சங்கிலாண்டபுரம் பாலம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பாத்திமா தெருவை சேர்ந்த சையது முஸ்தபா (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட இரண்டு வழக்கில் தொடர்புடைய ராஜா, சையது முஸ்தபா ஆகியவரை போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.