கையூட்டு பெற்ற வழக்கில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்
உதவிப்பேராசிரியர் டாக்டர்.பா.சக்திவேல் என்பவரின் பதவி உயர்வு தொடர்பான சம்பள நிலுவைத்தொகை பெற்று வழங்க கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் D.வேணுகோபால், வயது.62/2023, த/பெ.துரைராஜன், முன்னர் உதவியாளர், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி மண்டலம், திருச்சிராப்பள்ளி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் உள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு திரு.புஷ்பம் கல்லூாரி(தன்னாட்சி)யில் இயற்பியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்த டாக்டர்.பா.சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவைத்தொகையை பெற்று வழங்க, கையூட்டாக ரூ.2,000/-ம் கேட்டது தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் D.வேணுகோபால் என்பவர் மீது திருச்சி ஊ.த.க பிரிவு கு.எண்.3/2012, சட்டப்பிரிவு 7 ஊழல் தடுப்புச்சட்டம்-1988ன்படி கடந்த 18.01.2012ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 19.01.2012ந்தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் டாக்டர்.பா.சக்திவேல் என்பவரிடம் கையூட்டு பணம் ரூ.2,000/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி வேணுகோபால் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 17.03.2023 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்கள், திரு.D.வேணுகோபால், முன்னர் உதவியாளர், கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும்,ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும்
விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேற்படி வழக்கினை ஞா.சக்திவேல், காவல் ஆய்வாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் அவர்கள் திறம்படி வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.