கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 30 பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு
திருச்சி மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நாள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 162 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இதில் கோ-அபிசேகபுரம் கோட்டத்தில் நடைபெற்ற 34 முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 30 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக தங்க நாணயம் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக சைக்கிள் மற்றும் 3-வது பரிசாக பட்டு புடவை மேலும் 27 பேருக்கு ரூ.1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வ பாலாஜி வழங்கினார். மேலும் இன்று நடைபெறவுள்ள முகாமில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், உதவி செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.