திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் அப்ரோஸ்(38). இவரது மகன் ஸ்ரீசாம். மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த உஸ்மான் மகனும், ஸ்ரீசாமும் நேற்று முன்தினம் பம்பரம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 2 சிறுவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த உஸ்மான் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்ரீசாமை தாக்கினார். இதுகுறித்து தனது தாய் அப்ரோசிடம் ஸ்ரீசாம் தெரி வித்தார். எனது மகனை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டபோது அப்ரோஸை உஸ்மான் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் தனது தம்பியான அல்தாப் (33) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அப்ரோஸ் தெரிவித்தார். இதையடுத்து நண்பர் புஷ்பராஜ் என்பவருடன் அல்தாப் வந்து, உஸ்மானிடம் சண்டையிட்டார்.
உஸ்மானுக்கு ஆதரவாக வரகனேரி ஆனந்தபுரத்தை சேர்ந்த முபாரக் என்ற தக்காளி முபாரக் வந்தார். அப்போது இருதரப்பினரும் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் புஷ்பராஜ், அல்தாப் ஆகியோரை கத்தியால் குத்தப்பட்டனர்.
இதில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அல்தாப் அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து உஸ்மான், முபராக்கை ஆகியோரை தேடி வருகின்றனர்.