திருச்சியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 32,094 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

0 281
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5  திருச்சியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 32,094 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் 27ம் தேதி வரை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் திருச்சி வருவாய் மாவட்ட அளவில் 106 அரசு பள்ளிகள், 71 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஆகமொத்தம் 258 பள்ளிகளிலிருந்து 131 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 15,357 மாணவர்கள், 16,737 மாணவிகள் என மொத்தம் 32,094 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகையினை பெற்று 392 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் தனித்தேர்வர்களாக 271ஆண்கள், 176 பெண்கள் என மொத்தம் 447 பேர்கள்14 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மையங்களை ஆய்வு செய்வதற்காக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 230 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு:

பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை (9498383075, 9498383076) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வு தொடர்பான கட்டுப்பாடுகளையும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது:

தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிரியர்களுக்கும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

மேலும், பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.