கல்விக்கடனை ரத்து செய்ய எம்.எஸ்.எப். வலியுறுத்தல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் (எம்.எஸ்.எப்.) மாநில செயற்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்.எஸ்.எப். மாநில தலைவர் பழவேற்காடு எம்.அன்சாரி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ.எம்.எச். அன்சா் அலி வரவேற்றார்.
மாநில பொருளாளர் ஏ.எஸ்.அகமது நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் மற்றும் மாநில பொருளாளா் ஷாஜகான் ஆகியோர் எம்.எஸ்.எப். உறுப்பினர் சேர்ப்பு படிவம் மற்றும் அடையாள அட்டையை வழங்கி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்கள்.
தேசிய பொதுச்செயலாளர் முகமது அர்ஷத் பேரவை கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் சிறுபான்மை மாணவர்களுக்கு காயிதே மில்லத் பெயரால் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து விடுபட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உயர்கல்விக்காக வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.