தீயில் வீடு எரிந்து நாசம்; பரிதவிக்கும் திருநங்கைகள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மேல காவல்காரன் தெருவில் வசிப்பவர் திருநங்கையான ஆர்த்தி. இவருடன் ரித்திகா ஷேமலா, சுவிட்டி, தீபிகா உள்ளிட்ட 6 திருநங்கைகள் 2 அறைகளில் வசித்து வருகின்றனர். நேற்று 12 மணிக்கு மேல் வீட்டிலிருந்து அனைவரும் வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் வீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவென பரவியதில் அறையில் இருந்த பொருட்கள் தீயில் எரியத் தொடங்கியது. தீயைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துனையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த சமயபுரம் சிறப்பு உதவி அலுவலர்கள் பழனிச்சாமி மற்றும் ஜீவா, ஓட்டுனர் ரவிக்குமார், வீரர்கள் சதீஷ்குமார், பெரியசாமி, கிருஷ்ணன், சௌந்தரராஜன் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். மேலும் மற்ற அறைக்கு தீ பரவாமல் தீயை விரைந்து அணைத்ததால் அடுத்த அறையில் இருந்த பொருட்கள் தீ விபத்திலிருந்து தப்பியது.

இந்த தீ விபத்தில் வீட்டின் அறையில் இருந்த மர கட்டில், 2 பீரோ, டிவி பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, சேலை, துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்ததால் திருநங்கைகள் அனைவரும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.