குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பெஸ்டோ நகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பழனிச் சாமி(வயது 45). இவரது மனைவி வளர்மதி (வயது 40). கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதே போல் நேற்றுமுன்தினமும் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த வளர்மதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அப்போது அருகில் இருந்த கணவர் பழனிச்சாமி காப்பாற்ற முயன்றார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வளர்மதி பரிதாபமாக இறந்தார். பழனிச்சாமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.