சினிமா பாணியில் திருச்சி போலீசாருக்கும் கஞ்சா வியாபாரிக்கும் ஜேசிங் – உயிரை பணயம் வைத்த தலைமை காவலர்!

0 351
Stalin trichy visit

போலீசார் ரவுடியை ஜேசிங் செய்து பிடிப்பதும், பைக்கில் பின்தொடர்ந்து விரட்டுவதுமான சண்டை காட்சிகளை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். அதே பாணியில் திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சமூகத்தை பாழ்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை என்னவென்றால் அது போதை வஸ்துகள் தான். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பார்கள்‌. தங்கள் இன்னல்களில் இருந்து தற்காலிகமாக விடுபடவும், உடல் வலி மறக்கவும் மனிதர்களுக்கு போதை தேவைப்படுகிறது. ஆனால், அந்த போதையை மனிதனை மெல்ல மெல்ல தின்று அழித்து விடுகிறது. மது ஒரு பொதுவான போதைப்பொருள். மதுவுக்கு அடுத்தபடியாக நிறைய பேரை, அதுவும் குறிப்பாக இளைஞர்களை பிடித்திருக்கும் போதை என்னவென்றால் அது கஞ்சா தான். என்னதான் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்தாலும் அனைத்தையும் கடந்து கஞ்சா பொதுவெளிகளில் புகைந்து கொண்டு தான் இருக்கிறது.
பல்வேறு தடைகளையும் கடந்து இண்டு இடுக்குகளில் நுழைந்து பொதுவெளிக்கு வந்து கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதற்கு அடிமையாக மாற்றி அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கே தெரியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.

அதே கதைதான் திருச்சியிலும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் திருச்சி மெயில் இணையதளம் சார்பாக இரண்டு பக்கத்திற்கு கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தோம். குறிப்பாக திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பது மறுக்கப்படாத ஒரு உண்மையாக இருந்து வருகிறது. இதற்கு காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் சமயத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வியாபாரியின் காரை சினிமா பாணியில் துரத்திச்சென்று மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் பிடிக்க முயன்ற போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா வியாபாரியால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முகமது அனிபா (வயது 40) என்ற பிரபல கஞ்சா வியாபாரி மன்னார்புரம் பகுதியில் இருந்து டாடா காரில் கஞ்சா கடத்தி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மன்னார்புரம் சிக்னலில் வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்றனர். போலீசார் தன்னை பின்தொடர்வதை கண்ட முகமது அனிபா காரை மின்னல் வேகத்தில் விரட்டிச்சென்றான். ஆயினும் போலீசார் விடாது விரட்டிச்சென்றனர். பழைய பால்பண்ணை சிக்னல் அருகே சென்ற முகமது அனிபாவின் காரை தனது இருசக்கர வாகனத்தை காரின் முன்னிறுத்தி தடுக்க முயன்ற சரவணன் என்ற தலைமை காவலரை இடித்து தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் காரை விரட்டிச்சென்றான்.
ஆயினும் போலீசார் துரத்திச்சென்றதுடன் வாக்கி டாக்கியில் அவனது ஒவ்வொரு அசைவையும் போலீசார் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளித்த வண்ணம் காரை விரட்டி வந்தபோது சஞ்ஜீவி நகர் அருகே சாலையின் குறுக்கே பேரிகார்டை வைத்து போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது வந்த வேகத்தில் பேரிகார்டை மோதி தள்ளிவிட்டு தப்ப முயன்ற போது காரின் முன்பகுதி சேதமடைந்து காரின் வேகம் குறைந்த போது காவல்துறை வேனில் இருந்து குதித்த காவலர்கள் நொடிப்பொழுதில் காரில் ஏறி காரை நிறுத்தி முகமதுஅனிபாவை மடக்கி பிடித்தனர்.


போலீசாருக்கும் கஞ்சா வியாபாரி கார் சேசிங்கால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற முகமது அனிபா மீது காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை செய்ய முயலுதல் (ஐபிசி 353, 324, 307,8சி) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் முகமது அனிபாவிடமிருந்து 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனிபா குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். முகமது அனிபா மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் காயம் அடைந்த காவலர் சரவணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தனது உயிரை பணயம் வைத்து காரை விரட்டி சென்ற தலைமைக் காவலர் சரவணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது வீரச் செயலை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் C. சைலேந்திர பாபு ரூ.25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார்கள்.

மேலும், தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைமை காவலர் சரவணனுக்கு ஆறுதல் கூறினார். தலைமைக் காவலர் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க திருச்சி காவல்துறை ஆணையருக்கு காவல் துறைத் தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.மக்களைப் பாதுகாக்கும் ஒரு மகத்தான பாதுகாப்பு பணியில் பணியாற்றும் காவலர்கள், குற்றவாளிகளை பிடிக்க தன் உயிரையும் பணயம் வைத்து செயல்படுவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. தலைமை காவலர் சரவணன் உண்மையிலேயே கிரேட் தான்!

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.