திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பழங்கனாங்குடி ரோடு ராமானுஜர் தெருவில் வசிப்பவர் திருமாவளவன். லோடுமேன். இவ ரது மனைவி கவிமணி (வயது 37). இவர்களுக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது கவிமணி 5 மாத கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ள கட்டிலில் இடித்துக்கொண்டதில் கவிமணிக்கு வீட்டிலேயே குறைப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது.
அக்குழந்தையை அவரது கணவரும் அவரும் சேர்ந்து தன் வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். இந்நிலையில் கவிமணிக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே திருமாவளவன் மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக கவிமணி இறந்தார். இதுபற்றி நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.