திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு (பொறியியல் போன்ற தொழிற் கல்வி நீங்கலாக) மாதம் ரூ.600 வீதம், 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டுதல் மையத்தில் ஆண்டின் அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று பயன்பெறலாம். நேரில் வர இயலாதவர்கள் உதவித்தொகை கோரும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்புத்துறை இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.