பொடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் : வாயேஜர் விண்கல பயணம் கருத்தரங்கம்

0 7
Stalin trichy visit

பொடையூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனிதகுலத்தின் மாபெரும் விண்வெளிச் சாதனை-வாயேஜர் பயணம் கருத்தரங்கம்.

கடலூர் மாவட்டம், ம.பொடையூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனிதகுலத்தின் மாபெரும் விண்வெளிச் சாதனை-வாயேஜர் பயணம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் க.சிவராஜ் அனைவரையும் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்  நெடுஞ்செழியன் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்  ஜெயா,   கிரண்மாறன்,  மகேஸ்வரி,  ஆனந்தி முன்னிலை வகித்தனர். நேரு நினைவுக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியரும், தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் சங்கத்தின் (TASS) செயலாளருமான முனைவர் பொ. ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தனது உரையில், சூரிய குடும்பத்தின் தோற்றம், கோள்களின் அமைப்பு, துணைக்கோள்கள், விண்கற்கள், நட்சத்திரங்களின் உருவாக்கம், பிரபஞ்சத்தின் தோற்றம், நட்சத்திரக் கூட்டங்கள், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துகளை எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்கினார்.

தொடர்ந்து, 1977 செப்டம்பர் 5 அன்று அமெரிக்காவின் கேப் கனாவரலில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 விண்கலத்தின் சாதனைப் பயணம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வியாழன் மற்றும் சனி கோள்களை ஆய்வு செய்ததுடன், சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கிடையேயான விண்வெளியில் பயணித்து வரும் மனிதகுலத்தின் தொலைதூர விண்வெளித் தூதராக வாயேஜர் 1 விளங்குவதை விளக்கினார்.

வியாழனின் அயோ துணைக்கோளில் கண்டறியப்பட்ட எரிமலைச் செயல்பாடுகள், சனிக்கோளின் அழகிய வளையங்கள், டைட்டன் துணைக்கோளின் அடர்த்தியான வளிமண்டலம், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவியல் கருவிகள் மற்றும் புளூட்டோனியம்-238 அடிப்படையிலான RTG மின்சக்தி தொழில்நுட்பம் ஆகியவை மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன.

மேலும், 2026 நவம்பர் 18 அன்று வாயேஜர் 1 பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் வரலாற்றுச் சிறப்பையும் எடுத்துரைத்தார். ஒளி ஒரு நாளில் பயணிக்கும் சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவு ஒரு ஒளி நாள் எனப்படுவதை விளக்கினார். 1990 ஆம் ஆண்டு வாயேஜர் 1 எடுத்த புகழ்பெற்ற Pale Blue Dot புகைப்படத்தின் மூலம், பிரபஞ்சத்தின் பரந்த பரப்பில் பூமியின் சிறிய இருப்பிடத்தையும் அதன் மகத்துவத்தையும் உணர்த்தினார்.

விண்கலத்தில் எடுத்துச் செல்லப்படும் கோல்டன் ரெக்கார்டு, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள 55 மொழிகளின் வாழ்த்துகள், பூமிக்கும் வாயேஜர் விண்கலத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு தாமதம் மற்றும் விண்மீன்களுக்கிடையேயான விண்வெளியின் தன்மைகள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கருத்தரங்குடன் இணைந்து மாணவர்களுக்கு நேரடி அறிவியல் அனுபவத்தை வழங்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிலவின் மாதிரி மற்றும் மெய்நிகர் விண்வெளிக் காட்சி (Virtual Space Show) மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தன. வான் நோக்கல் நிகழ்வில் சிறப்பு சூரிய வடிகட்டி பொருத்தப்பட்ட தொலைநோக்கியின் உதவியுடன் சூரியனில் காணப்படும் கரும்புள்ளிகள் (Sunspots) பார்வையிடப்பட்டன. மேலும், தொலைநோக்கி மூலம் தொலைதூர பொருட்களையும் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்வெளி அறிவியல் தொடர்பான அனுபவங்களைப் பெற்றனர். பாடப்புத்தகங்களில் படிக்கும் அறிவியல் கருத்துகளை நேரடியாகக் காட்சிகள் மற்றும் தொலைநோக்கி வாயிலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியது. மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சி ஆர்வம் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தின் மீதான ஈடுபாட்டை வளர்த்து, எதிர்காலத்தில் இஸ்ரோ, நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற கனவை விதைப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.