கூட்டணி தர்மத்தை மீறிய கம்யூனிஸ்ட்; திருச்சி திமுகவினர் குமுறல்!

0 686
Stalin trichy visit

தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றிற்கு மேயர், துணை மேயர் தேர்வுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் தேர்தலில் சீட்டு கிடைக்காத கட்சியினர் சிலர் சுயேச்சை ஆகவும், கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு விதிமுறைகளை மீறி தனியாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தொடர்ந்து “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால் அந்தப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறியதால் கூனிக் குறுகி நிற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதேபோல திமுக கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒருவர் தேர்தலில் சீட் கிடைக்காததால் தனியாக நின்று குலுக்கல் முறையில் வெற்றி பெற்றதால் திமுகவினர் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பேரூராட்சியில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவரும் போட்டியிட்டு சம வாக்குகள் பெற்று குலுக்கல் முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி தா.பேட்டையில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டு திமுக சார்பில் அருணா, அதிமுக சார்பில் கமலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 417

வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கையில் திமுகவை சேர்ந்த அருணா 163 வாக்குகளும், தபால் வாக்கு ஒன்றும் பெற்றார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யாவும் 163 வாக்குகளும், தபால் வாக்கு ஒன்றும் பெற்றார். இருவரும் சம வாக்குகள் பெற்றதால் வேட்பாளரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவானது. இதை அடுத்து அருணா மற்றும் சத்யா ஆகியோரின் பெயர்கள் தனித்தனி துண்டு சீட்டில் எழுதப்பட்டு ஒரு டப்பாவில் போட்டு குலுக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த ஒரு சிறுவனை டப்பாவில் உள்ள சீட்டை எடுக்குமாறு கூறினர்

ஆனால் சிறுவன் அச்சமடைந்து சீட்டை எடுக்க வில்லை. அந்த நேரம் வேட்பாளர்களுக்கு திக் திக் நிமிடமாக அமைந்தது. பின்னர் வேறொரு சிறுமியை அழைத்து வந்து அந்த சிறுமியின் மூலம் சீட்டு எடுக்கப்பட்டது. இதில் சத்யா தேர்வானார். இதையடுத்து 6-வது வார்டு உறுப்பினராக சத்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தா.பேட்டை 6வது வார்டில் போட்டியிடுவதற்கு சத்யா திமுக கூட்டணியில் நிற்பதற்கு கேட்டுள்ளார். திமுக கூட்டணியில் சீட் கொடுக்காததால் கூட்டணியிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் போட்டியிட்டால் ராஜினாமா செய்ய வேண்டுமென முதல்வர் கூறியுள்ள நிலையில் கூட்டணி கட்சியை சேர்ந்த இவர்கள் கட்சி தர்மத்தை மீறி இப்படி செய்யலாமா? என முசிறி பகுதி திமுகவினர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

Leave A Reply

Your email address will not be published.