குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா; ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன…!
திருச்சி புத்தூரில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் இடத்தில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசி மாதம் நடைபெறும் 56 குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து கடந்த 8ம் தேதி காளியவிட்டமும், 9ம் தேதி சுத்த பூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடா

பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக் குடி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முதல் மரியாதையாக, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது. கிடாரத்தத்தைகோயில் மருளாளி குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திகடனாக பலியிடப்பட்டது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.