திருச்சி மாவட்டம், இலுப்பூரை அடுத்த பெருமநாடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 22). மாலத்தீவில் பணியாற்றி வரும் இவர் கடந்த 10ம் தேதி தமிழகம் வந்தார். இவரை அழைத்து வர நண்பர்களான மன்னார்குடி ஜீவானந்தம்(வயது 31), இலுப்பூர் சக்திவேல், திருவாரூர் இளஞ்சிறார் உள்ளிட்ட 4 பேர் காரில் கொச்சிக்கு சென்றனர். திரும்பி வரும்போது, மணப்பாறையை அடுத்த
பொன்னம்பலம்பட்டி சுங்க சாவடியில் காரில் இருந்த ஃபாஸ்ட் டிராக் கணக்கில் பணம் இல்லாததால், கையில் இருந்த ரூ.100 மட்டும் செலுத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் பணியில் இருந்த பழனிவேல்(வயது 23) என்பவரை அவர்கள் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் பாண்டி, இளஞ்சிறார், ஜீவானந்தம், சக்திவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்து லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.