திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் முகமது பஷீர்(வயது 45). சம்பவத்தன்று அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் முகமது பஷீர், அவரது மனைவி மற்றும் உறவினர் ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4 பவுன் தங்க நகைகள், தங்க வாட்ச், வெள்ளி கொலுசு என சுமார் ரூ 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்டது, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய உறையூரை சேர்ந்த ரவுடி நவீன்குமார்(வயது 27), திருவெறும்பூர் சுருளிகோயில் தெரு ரஞ்சித்(என்கிற) பார்த்திபன் ஆகியோர் எனத் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.