மணப்பாறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்,வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் உள்ள ஆறுகளில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் அருகில் உள்ள அரியாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது ஆற்றிலிருந்து மணல் அள்ளிக் கொண்டு வெளியே வந்த மூன்று மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தியபோது மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து மூன்று வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வண்டிகளை மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை போலீசார் சித்தாநத்தத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு மாட்டுவண்டிகளின் உரிமையாளர்கள் ராஜ்குமார் (வயது 40), கனகராஜ் (வயது 40) ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.
