மணப்பாறை அருகே கொரோனா அச்சத்தால் ஓட்டுனர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை
மணப்பாறை அருகே கொரோனா அச்சத்தால் ஓட்டுனர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அனுக்கானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 49). சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனரான வேலை பார்த்து வந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன் கொரோனா அறிகுறி இருப்பது போல் உணர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வழக்கம்போல் இரவு வீட்டில் தூங்கியுள்ளார். நள்ளிரவு திடீரென மாயமான அவரை குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழுத்து மற்றும் கையை பிளேடால் அறுத்து கொண்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். முதலில் கையை அறுத்துக் கொண்ட பிச்சைமணி பின்னர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் பைற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா அச்சத்தால் ஓட்டுனர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.