விவசாயிகளின் வாழ்வில் இருளை விலக்கி ஒளியேற்றிய திமுக அரசு – மகிழும் திருச்சி விவசாயிகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்காக நல்ல பல திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பாக 7 உறுதிமொழிகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானதாக வேளாண்மையும், நீர்வளமும் குறிப்பிடத்தக்கதாகும். மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்பதை தமிழக முதல்வர் முக்கிய இலக்காக அறிவித்தார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டினுடைய நிகர பயிர் செய்யும் பரப்பு 60 விடுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்துகின்ற அளவிற்கு திட்டமிடுதலை முதல்வர் முன்னெடுத்துள்ளார். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட நாளான ஜுன் 12ம் தேதி அன்று டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 5.21 இலட்சம் ஏக்கர் அளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்ற வகையில் மேட்டூர் அணைக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீரைத் திறந்து வைத்தார்கள். பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே, உழவர் அமைப்புகளை கலந்தாலோசித்து திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை என 9 மாவட்டங்களின் டெல்டா பாசனப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளைத் தூர்வாரி சீரமைக்கின்ற வகையில் ரூபாய் 65.10 கோடி மதிப்பில் 647 பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், குறுவை சாகுபடி பரப்பை மேலும் அதிகரிக்கின்ற வகையிலும், குறுவை சாகுபடியைத் தொடங்குகின்ற விவசாயிகளுக்குத் தேவையான விதைகள்,உரங்கள், பூச்சி மருந்துகள் போன்ற இடுபொருட்கள் தேவையான அளவிற்கு இருப்பில் வைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதோடு விவசாயிகளுக்கு மானியத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
குறுவை சாகுபடியினை விவசாயிகள் முழுமையாக முன்னெடுப்பு செய்து விவசாயப் பணிகளை மேற்கொள்கின்ற வகையில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உரமாக 1,90,000 ஏக்கர் அளவிற்கு ரூபாய் 41.52 கோடி நெல்விதைகளாக 28.70 மெட்ரிக்டன் அளவிற்கு ரூபாய் 5 கோடி பசுந்தாள் உரப்பை விதைகள் 24 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு ரூபாய் 3.36 கோடி உள்பட மொத்த ரூபாய் 50 கோடியினை மானியமாக அறிவித்து, அதன்படி திட்டப் பயன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாயிகள் குறுவை சாகுபடியினை தொடங்கி வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சீரிய தலைமையிலான வழிகாட்டுதலிலும், பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலான வழிகாட்டுதலிலும், வேளாண் விவசாயிகள் பயன்பெரும் வகையில் வேளாண் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற வகையில் வேளாண் திட்ட செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறுவதில் அதிக அக்கறை கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். குறுவை சாகுபடியைப் பொறுத்தவரையில் திருச்சி மாவட்டத்தில் அதிக அளவாக அதாவது இலால்குடி வட்டாரத்தில் 5,200 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு அடுத்ததாக திருவெறும்பூர், அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர் வட்டாரங்களில் 500 ஏக்கர் அளவிலும் மேற்கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் உரம் மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 2,185 வீதம் 5700 ஏக்கருக்கும், 50 சதவீதம் மானியத்தில் தரமான விதைநெல், 90 மெட்ரிக் டன் அளவிற்கு கிலோ ஒன்றிற்கு ரூபாய் 17.50 வீதமும் பசுந்தாள் உரப்பை விதை ஏக்கர் ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூபாய் 1,400 வீதம் 750 ஏக்கருக்கும் என மொத்தம் குறுவை சாகுபடிக்காக ரூபாய் 152 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏறத்தாழ 5,300 விவசாயிகள் பயன்பெற்று குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்கான 100 சதவிகித உரம் மானியம் வழங்குகின்ற திட்டத்தினை இலால்குடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு உரங்களை நூறு சதவிகித மானியத்தில் வழங்கினார்கள். விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொடங்கிட குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள், தரமான சான்று பெற்ற நெல்விதைகள் வினியோகம் மானியத்தில் உயிர் உரங்கள், 50 சதவீதம் மானியத்தில் நுண்னூட்ட சத்துக்கள் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை வழங்கி தேவையான ஆலோசனை வழங்குதல், கூட்டுறவுத்துறை மூலம் வேளாண் விவசாயிகளுக்கு கடனுதவிகள் என பல்வேறு திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் குறுவை சாகுபடிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள இலால்குடி வட்டாரம் மும்முடிச்சோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மா.கணேஷ்குமார் கூறியதாவது…”எங்கள் பகுதியில் எப்போதுமே சம்பா சாகுபடிதான் நடக்கும்.மேட்டூரில் தண்ணீர் திறப்பது எப்போது என்று தெரியாமல் சாகுபடிப் பணிகள் தாமதமாகவே தொடங்கும். தமிழக முதல்வர் மேட்டூரில் இருந்து குறிப்பிட்ட நாளான ஜுன் 12 அன்றே தண்ணீரைத் திறந்து வைத்தார்கள். குறுவை சாகுபடிக்கான திட்ட மானியங்களையும் அறிவித்து வழங்கினார்கள். இதன்காரணமாக விவசாயத்திற்கான பணிகளை நாங்கள் தொடங்கி தரமான நெல் விதைகளைப் பெற்று நடவு செய்து பணிகளைத் தொடங்கி விவசாயம் நடைபெற்று வருகிறது. 100 சதவீதம் மானியத்தில் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டி.ஏ.பி. 112 மூட்டை பொட்டாஷ் ஆகிவற்றை பயிர் நடவுக்கு முன்னரே கொடுத்தார்கள். இது எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. இதனால் எங்களுக்கு 2,185 ரூபாய் ஏக்கர் ஒன்றிற்கு செலவு மிச்சமாகிவுள்ளது. நடவுக்கு முன்னரே கொடுத்ததால் அடி உரமாக இதனையிட்டுத்தான் நடவு செய்திருக்கிறோம். இதற்காக மாண்மிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களது நெஞ்சாந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இலால்குடி வட்டாரம் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி தெரிவித்ததாவது….”தமிழக முதல்வர் அவர்கள் சொன்னபடியே ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துள்ளார். இதற்காக முதலில் விவசாயிகளின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். குறுவை சாகுபடித் திட்டத்தையும் மானியத்தில் அறிவித்து வழங்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக உரங்களைப் பெற்று அடி உரமாக இட்டு பயிர் நடவுசெய்துள்ளோம். எந்த ஒரு அரசுமே இரசாயன உரம் 100 சதவீதம் மானியத்தில் வழங்கியதில்லை. எங்களின் நிலையறிந்து எங்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரங்களையும், மானியத்தில் விதைகள், பசுந்தாள் உரப்பை விதைகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு எனது குடும்பத்தின் சார்பிலும், எங்களது விவசாயிகள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். வேளாண் திட்டங்களால் வேளாண் விவசாயிகள் பெரிதும் மகிழ்வடைந்து முழு ஈடுபாட்டுடன் விவசாயப் பணிகளை மேற்கொள்வதோடு, உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்டும், விவசாயிகள் வாழ்வின் இருளைப் போக்கி ஒளிவிளக்காய் திகழ்வதாக உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வாழ்த்துகின்றனர்”. என்றார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8