சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் படுகாயம்!
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரிவெயில் நேற்று தொடங்கியது. இதனால் காலை முதல் திருச்சி மாவட்ட பகுதிகளில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. திடீரென மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பின்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 29). இவர்
மணப்பாறை உசிலம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரவு கனமழை பெய்தபோது இவரது வீட்டில் அருகிலுள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர் திடீரென இடிந்து அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த சங்கீதா மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.