திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய அழைப்பு!
“ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டத்திற்கு திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட 15 ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளின் விற்பனை மையம் வைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் திருபுவனம் பட்டு, ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள், திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் மணப்பாறை முறுக்கு, தஞ்சை ரெயில் நிலையத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பெம்மைகள் மற்றும் தஞ்சாவூர் கலைத்தட்டு பொருட்கள், கும்பகோணத்தில் சுவாமிமலை வெண்கலச் சின்னங்கள், மயிலாடுதுறையில் நாச்சியார்கோவில் பித்தளை பொருட்கள், சிதம்பரத்தில் தைக்கால் பிரம்பு மற்றும் பாய் பொருட்கள், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிறுவன்தாடு பட்டு, புதுசேரி ரெயில் நிலையத்தில் டெரகோட்டா மற்றும் பேப்பியர் பொருட்கள், நாகபட்டினத்தில் கடல் சிப்பி பொருட்கள், வேலூர் கண்டோன்மெண்டில் தோல் பொருட்கள்,
திருவண்ணாமலையில் ஆரணி பட்டு, விருதாச்சலம் ஜங்ஷனில் டெரகோட்டா மற்றும் பீங்கான் கைவினைப்பொருட்கள், கடலூர் துறைமுக ஜங்ஷனில் முந்திரி பொருட்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம். இந்த ரெயில் நிலையங்களில் உள்ளூர் கைவினைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்கும், காட்சிப்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் ரெயில்வே நிலையங்களில் இடம் ஒதுக்கப்படும். இதில் கலைப்பொருட்கள்,
கைத்தறிகள், வேளாண் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவை இடம் பெறும். இங்கு விற்பனை மையம் வைப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நாட்களை நீட்டிப்பு செய்தும் விற்பனை செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விற்பனையாளர்கள் மத்திய, மாநில அரசு வழங்கிய கைவினைஞர் அல்லது நெசவாளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், பழங்குடி கைவினைஞர்கள் நெசவாளர்கள், கைவினைஞர்கள் பதிவு
செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்கள், மைக்ரோ எண்டர்பிரைசஸ் (எம்.எஸ்.எம்.இ) இன் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை வருகிற 15-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட நிலைய மேலாளர் அல்லது வணிக ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9003864954, 9003864950 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை கோட்ட வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்.