திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோ்களாக்க தமிழக அரசு நீடு-சிம் எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விருப்புவோர் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருத்தல் அவசியம். 21 வயதுக்கு மேல் 55 வயது வரையும் இருக்க வேண்டும்.
திட்டமதிப்பீட்டின் நிலையான மூலதனத்தில் 25 சதவீதம் ரூ.50 இலட்சம் வரை மூலதன மானியமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு வகைப் பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்களிப்பாக செலுத்த வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.