“எங்க குடும்பமே ஸ்போர்ட்ஸ் குடும்பம் தான்” – தடகளத்தில் அசத்தி வரும் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி!

0 533
Stalin trichy visit

விட்டுக் கொடுப்பது வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்வது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்ப்பது என ஒரு மனிதனுக்கு பயிற்சியையும் முயற்சியையும் மகிழ்ச்சியும் அளிப்பது என்றால் அது விளையாட்டுகள் மட்டும்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். இந்த கொண்டாட்டம் தான் நாளைய அவர்களின் வெற்றியிக்கு சிறிய படியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அப்படி கொண்டாடப்பட வேண்டியவர்களில் ஒருவர். திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனையின் தொகுப்பு இது!

திருச்சி மாவட்டம் கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் அ.கெவினா அஸ்வினி. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்து வருகிறார். இவருடைய அப்பா அண்ணாவி சர்வதேச அளவிலான தடகள வீரராக இருந்து வருகிறார், இவருடைய அம்மா சுகந்தி விளையாட்டு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவருடைய அண்ணன் தடகள வீரராகவும், இவர் ஒரு தடகள வீரராக இருந்து வருகிறார். ஆகமொத்தம் திருச்சியில் விளையாட்டுக்கென்று ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பு காரணமாக கெவினா அஸ்வினி சமீபத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் சங்குரூரில் நடைபெற்ற 19வது தேசிய கோப்பை இளையோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து, அதுவும் திருச்சியிலிருந்து கெவினா அஸ்வினி கலந்துகொண்டு உயரம் தாண்டுதல் போட்டியில் 1.66மீ தாண்டி 2வது பரிசையும் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இதுகுறித்து தடகள வீராங்கனை கெவினா அஸ்வினியை தொடர்புகொண்டு பேசினோம்…“என்னுடைய அம்மா, அப்பா இருவருமே ஸ்போர்ட்ஸ் வீரர் வீராங்கனைகள் தான். அவர்கள் சிறு வயது முதலே என்னையும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேனாகத்தான் வளர்த்தார்கள். என்னுடைய அண்ணனும் தடகள வீரராக இருந்து வருகிறார். இப்படி நாங்கள் அனைவருமே ஸ்போர்ட்ஸ் குடும்பமாக இருக்கிறோம்.

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் போட்டிகள் குறைவாக தான் நடத்தப்படுகிறது. பயிற்சி மேற்கொள்வதற்கும் மிகுந்த சிரமமாக இருக்கிறது. ஆன்லைன் முறையில் பதிவு செய்து தான் ஒரு சில போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறோம். தற்போது இந்த பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பெடரேஷன் கோப்பைக்கு கல்லூரியின் ஒத்துழைப்பால் என்னால் கலந்து கொண்டு பரிசு வெல்ல முடிந்தது.

நிச்சயமாக இனிவரும் காலங்களில் என் பெற்றோரின் ஒத்துழைப்போடு மிகுந்த பயிற்சி மேற்கொண்டு, 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது தான் என்னுடைய மிகப்பெரிய கனவாக உள்ளது. அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்றார்.


மேலும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற பெடரேசன் கோப்பையில் நீளம் தாண்டுதலில் 2வது பரிசு பெற்ற அஸ்வினிக்கு கல்லூரி முதல்வர் Sr.கிறிஸ்டினா ப்ரிஜிட் மற்றும் உடற்கல்வி துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.