பால்குட ஊர்வலத்தின் உள்ளே நுழைந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பக்தர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா இன்று காலை துவங்கி நடைபெற்றது.
இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து துவங்கிய பால்குடம் ராஜ வழிவீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலின் தெற்குப் பகுதியான கச்சேரி ரோடு பகுதியில் பால் குடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிது சிறிதாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கிலாண பக்தர்கள் பால் குடங்களை சுமந்து நின்றபோது 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்தாலும் ஆம்புலன்சை கண்டவுடன் அனைவரும் ஒதுங்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் கூட்டத்தை கடந்து எளிதாக வெளியேறியது. ஆம்புலன்ஸ் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.