300 ஆண்டுகளுக்குப் பின் மேல் அன்பில் கிராமத்தில் நடைபெற்ற திருத்தேரோட்டம்

0 289
Stalin trichy visit

300 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சி லால்குடியை அடுத்த மேல் அன்பில் கிராமத்தில் நடைபெற்ற திருத்தேரோட்டம் – கோவிந்தா கோபாலா முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான உப கோவிலாக லால்குடியை அடுத்த மேல் அன்பில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் – உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது.

லால்குடியை அடுத்த மேல் அன்பில் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் ஆகும் – ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலமாகவும், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலமாகவும் பார்க்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அழகிய வள்ளி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக பிரம்மோற்சவங்கள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக திருத்தேர் ஆனது உருவாக்கப்பட்டு கடந்த மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது – இதனையடுத்து கடந்த வாரம் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி நாள்தோறும் நம்பெருமாள் நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது – சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்த தங்கள் ஊர் பெருமாள் ஆலய திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டதால் அவ்வூர் மக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கினர். கோவிந்தா கோபாலா ஸ்லோகங்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் வலம் வந்த திருத்தேர் நிலையை அடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.