சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்கியம் கரட்டுப்பகுதி, நடமாட்டப்பகுதிகளில் 4 டிராப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இரவிலும் ஊடுருவி துல்லியமாக, அசையும் பொருட்களை படமெடுக்கும் கேமராக்களில் நேற்றைய முன்தினமிரவு எந்த ஒரு பதிவும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிறுத்தையின் நடமாட்டத்தையும், குட்டிகளின் நடமாட்டத்தையும் ஆராய்ந்த பிறகே, சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகள் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா தலைமையில், துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி மேற்பார்வையில், மணப்பாறை, திருச்சி, மற்றும் துறையூர் சரக வனத்துறையினர் ஒருங்கிணைந்து ஆங்கியம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். பகுதிக்கு நான்கு நபர்கள் வீதம் வீத முறைப்படி கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
சிறுத்தையின் கால் தடங்கள், நடமாட்டங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கியத்தை சேர்ந்த ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான, கருவேப்பிலை தோட்டம், மரவள்ளிக்கிழங்கு தோட்டப்பகுதிகளில் சிறுத்தை மறைந்திருக்கலாம் என தெரிய வருகிறது. அதனால், ஆங்கியம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான அழகாபுரி, கோனேரிப்பட்டி பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும், அத்யாவசிய தேவையை தவிர வெளியே வரவேண்டாமெனவும் , செல்லும் சமயத்தில் தனியாக செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.