இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்
சென்னை, ஆக.29 திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படமாட்டாது என பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.
காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை கேட்கும் மனுதாரர் வெங்கடாசலம், தேர்தல் வழக்குகள் எதுவும் தாக்கல் செய்தவர் அல்ல.
இவர், திருச்சி கிழக்கு தொகுதியின் வாக்காளரும் இல்லை. திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், அடிப்படை உரிமையில்லாமல், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுநலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.
இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நடந்துள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். வெங்கடாசலம் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.