கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

0 338
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் ரூ.500 கொடுத்துள்ளார். இதனை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பதை அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சவுரி ராஜ் மகன் குணா (வயது 24) என தெரியவந்தது. மேலும் விசாரணையில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியைச் சேர்ந்த வால்மால்பாளையம் மேலூரில் வசித்து வரும் தர்மராஜ் என்பவரது, வீட்டை வாடகைக்கு எடுத்து அவரையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொண்டு கள்ள நோட்டு தயாரித்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தர்மராஜ் வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த தர்மராஜை கைது செய்த போலீசார், கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளையும், கள்ள நோட்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த காகிதங்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், கள்ள நோட்டை சமயபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் விட்ட குளத்தூர் தாலுகா சத்தியமங்கலம் அருகே உள்ள மேலூர் கள்ளர் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் மதன்குமார் (21), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அருண்குமார் (40), மற்றொரு அருண்குமார் (21) ஆகியோரையும் கைது செய்தனர்.

இவர்கள் எத்தனை ஆண்டு காலம் கள்ள நோட்டு தயாரித்து வருகிறார்கள்? எந்தெந்த பகுதிகளில் அதை புழக்கத்தில் விட்டார்கள், இதில், வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணச்சநல்லூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.