சமயபுரம் கோவிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு பாதுகாவலர்களை தாண்டி அத்துமீறி உள்ளே நுழையும் கும்பல் – தொடர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி கோவில் இணை ஆணையர் கல்யாணி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய புகாரை அடுத்து அதிரடி நடவடிக்கை.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம் – பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்வதற்காக 100 ரூபாய் கட்டண வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது – ஆனால் சமயபுரம்,ஈச்சம்பட்டி கண்ணனூர்,மகாளிகுடி போன்ற அருகில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் விரைவில் சாமி தரிசனம் செய்யவ் ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி பக்தர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் அழைத்து செல்வது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
இதே போல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பின் வாசல் வழியாக பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சமயபுரம் பகுதியை சேர்ந்த தனிகைவேல்,சந்தோஷ் ஆகிய இருவர் பக்தர்களை அழைத்துச் சென்றபோது தனியார் உதவி பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தினார்கள் – அப்போது அவர்களிடம் தாக்குதல் நடத்தியதால் சந்தோஷ் மற்றும் தணிகைவேல் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இதில் தொடர்புடைய மகாளிக்குடி, கல்லுக்குடி, ஈச்சம்பட்டி அண்ணா நகர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 28 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கோவில் முறை தாரர்கள் என்கிற பெயரில் தொடர்ந்து இதுபோன்று சுற்றி தெரியும் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது