டிராக்டரில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையத்தில் வயலில் உழுது கொண்டிருந்த டிராக்டரில் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையம் மந்தியார் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான முருகேசன். இவருடைய மகன் 9 வயதான பிரகாஷ். இவர் வடக்குப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிரகாசின் பெற்றோர்கள் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ராஜ்குமார் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது ராஜ்குமார் தனது டிராக்டரில் அங்குள்ள வயலில் உழவு செய்து கொண்டிருந்தார்.இந்த டிராக்டரில் பள்ளி மாணவன் பிரகாஷ் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதமாக டிராக்டரிலிருந்து பள்ளி மாணவன் பிரகாஷ் தவறி விழுந்துள்ளார். இதில் மாணவனுக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.