புகையில்லா போகி பண்டிகை: மாநகராட்சி ஆணையர் அறிவுரை
திருச்சி, ஜன.12. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை சாலைகளில் குவித்து வைத்து தீயிட்டு கொளுத்தும் வழக்கம் இருந்து வருகிறது இதனால் காற்று மாசுபாடு அடைவதுடன் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.அதனை கருத்தில் கொண்டு மாசுபாட்டை குறைத்திடும் பொருட்டு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புகையில்லா போகி’பண்டிகையை கொண்டாட மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படிபொது மக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பழைய பொருட்களை, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகின்ற 14- ஆம் தேதி வரை பொருட்களை சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் அல்லது நுண்ணுர செயலாக்க மய்யத்தில் கொடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம்’ புகையில்லா போகி ‘பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.