மணப்பாறை அருகே கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆவாரங்காடு என்ற இடத்தில் உள்ள பொன்னர் சங்கர் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு விழா தமிழர் திருநாளை முன்னிட்டு நடைபெறுகிறது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி ஆகிய நான்கு கிராம மக்களால் இந்த ஜல்லிக்கட்டு விழாவானது நடத்தப்படுகிறது.
ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 650 ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. சீறி வரும் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் ஒரு பிரிவுக்கு 25 வீரர்கள் 50 மாடுகள் என களம் காணுகின்றனர்.
காளைகளை அடக்க காளையர்களும், அடங்க மறுத்து காளைகளும் ஜல்லிக்கட்டு களத்தை உற்சாகப் படுத்தி வருகின்றனர்.
போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் 350 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.