“முன்கள பணியாளர்களே கடவுள்” – திருச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரா நகரில் தேவகி – வாசுதேவருக்கு 8வது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.

தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.
இவராக கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா” ”முகுந்தா” என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். பிருந்தாவனத்தில் ஒவ்வோவொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி ஒருபுறம் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் கொரோனா நோய் தொற்றும் ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றை தடுப்பதற்காக திருச்சியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர், ஜோசப் கிருஷ்ணன் 2-வது தெருவில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து வித்தியாசமான முறையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை கொண்டு கிருஷ்ணர் வேடம், ராதை வேடம் அணிவித்து பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராதை, ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்கள பணியாளர்களே கடவுள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக பதாகைகளை ஏந்தியவாறு சென்று, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கியும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோரை கௌரவிக்கும் விதமாக, அவர்களே கடவுள் என்பதை பிரதிபலித்து, ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
கிருஷ்ணஜெயந்தி யோடு கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்திய திருச்சி அரியமங்கலம் பகுதியினருக்கு வாழ்த்துக்கள்.



திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8