அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மணச்சநல்லூர் அருகே நெம்பர் 2 கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் 21 வயதான சந்துரு. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இன்று சந்துரு தனது மோட்டார் பைக்கில் குணசீலத்தில் இருந்து கரியமாணிக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாத்தலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பி சென்றது.இதில் முகத்தில் படுகாயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.