திருச்சி, மே 6 திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முசிறி புதுத்தெருவைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவரின் மகன் மகேஸ்வர தயால் (19) இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி (B.Sc Computer Science) பயின்று வந்தார். இவருடன் முசிறி சிந்தாமணி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அருள் முத்துக்குமரன் (20) என்பவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அருள் முத்துக்குமரன் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் (B.Com) பயின்று வந்தார்.
இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், இருவரும் இருசக்கர வாகனத்தில் முசிறியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் SB மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முசிறி போலீசார், மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத ஏதேனும் ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதா? என்கிற கோணத்தில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.