குற்றவாளியை சிறைக்கு அனுப்பாமல் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆய்வாளர்… பொறிவைத்து பிடித்த திருச்சி காவல்துறையினர்…
மார்ச்.28. திருச்சி, அடிதடி வழக்கில் விவசாயியை சிறைக்கு அனுப்பாமல் காவல்நிலைய பிணையில் விட 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னால் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை.
திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவ மீதான அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல்நிலைய பிணையில் விடுவிக்க லஞ்சம் ரூ.6000/- கேட்டது தொடர்பாக கடந்த 01.11.2006 அன்று திரு.S.P.செல்வராஜ், முன்னாள் காவல் ஆய்வாளர், சிறுகனூர் காவல் நிலையம், என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.15/2006-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பொறிவைப்பு நடவடிக்கையின் போது, திரு.சீனிவாசனிடம் லஞ்ச பணம் ரூ.6000/- கேட்டு பெற்றது தொடர்பாக மேற்படி எதிரி திரு.S.P.செல்வராஜ், முன்னாள் காவல் ஆய்வாளர், சிறுகனூர் காவல்நிலையம், திருச்சி என்பவர் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவுற்று இன்று 28.03.2023, திருச்சி, ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்கள், மேற்படி திரு.S.P.செல்வராஜ், முன்னாள் காவல் ஆய்வாளர், சிறுகனூர் காவல் நிலையம், திருச்சி என்பவர் லஞ்ச பணம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திரு.பிரசன்ன வெங்கடேஷ், காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, திருச்சி அவர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரியை பொறிவைத்து பிடித்தும், திரு-அம்பிகாபதி, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, திருச்சி அவர்கள் புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், திரு.மணிகண்டன், காவல் துணைக்கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு. திருச்சி அவர்கள் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும் மற்றும் திரு.சுரேஷ்குமார், அரசு சிறப்பு வழக்குரைஞர், ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம், திருச்சி திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்துள்ளார்கள்.