உப்பிலியபுரம் ஒன்றியக்குழு கூட்டம்..! அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!
ஏப்ரல்.02, திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் , அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மணிவேல் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் மன்றப் பொருள்களின் மீதான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் அத்தியப்பன் , “உப்பிலியபுரம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு மூன்று வருடங்களாகி விட்டது. புதிய கட்டிடத்தை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதற்கான கல்வெட்டை அலுவலக முன்பாக வைக்கக் கோரி பல முறை மன்றக் கூட்டத்தின் போது நான்சொல்லியும் இதுநாள் வரை ஏன் கல்வெட்டை வைக்கவில்லை. எனக் கேள்வி எழுப்பினார். மேலும் எந்தத் தேதியில் , யார் திறந்தார்கள் என்றாவது பதில் சொல்லுங்கள் என வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரனிடம் கேட்டார். அதற்கு அருகிலிருந்த பச்சபெருமாள்பட்டி திமுக கவுன்சிலர் ராஜசேகரன், இதற்கெல்லாம் ஆணையர் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும், நாங்க தான் பதில் சொல்வோம் என்று ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் அத்தியப்பன் ஆணையரிடம் விளக்கம் கேட்டவாறு நின்றிருக்க பதிலேதும் கூறாமல் ஆணையர் மவுனம் காக்க, இதனைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர் கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். மேலும் கல்வெட்டு வைப்பதா கூடாதா என கூட்டத்தில் மெஜாரிட்டி பார்த்து தான் நிறைவேற்ற வேண்டும் என வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் , திமுக கவுன்சிலர் ராஜசேகரன் கூறினார். ஒரு அதிகாரிக்கே உத்தரவிடும் வகையில் திமுக கவுன்சிலர் பேசியதைக் கண்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்துப் போயினர்..அதனைத் தொடர்ந்து அலுவலக வாசலில் அதிமுக கவுன்சிலர் அத்தியப்பன் சக அதிமுக கவுன்சிலர்களான தனலட்சுமி, லலிதா ஆகியோருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் அத்தியப்பனிடம் கூட்டத்தில் தீர்மானம் வைத்து நிறைவேற்றப்படும் என ஆணையர் குணசேகரன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத அதிமுக கவுன்சிலர் அத்தியப்பன் பலமுறை இது குறித்து பேசியும் இது நாள் பலனில்லை என்பதால் , தொடர்ந்து இது குறித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து அலுவலக வளாகத்தை விட்டு உடனடியாக அங்கிருந்துவெளியேறினார்