விவசாயிகளுக்கு அங்ககச் சான்றட்டை வழங்கல்
அங்கக விளைபொருட்கள் உற்பத்தி செய்பவர், அங்கக விளை பொருட்கள் பதனிடுவோர் மற்றும் அங்கக பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை மற்றும் மத்திய அரசின் அப்பிடா நிறுவனத்தின் அங்கீகார அடிப்படையில் தனிநபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து, இயற்கை வேளாண்மை சான்றை பெறலாம்.
காய்கனிகள் மற்றும் பயிர் உற்பத்தியுடன் கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் கையாளுதல், தேனீ வளர்ப்பு செய்வோரும் அங்ககச்சான்றினை பெறலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2,700-ம், பிற விவசாயிகளுக்கு ரூ.3,200-ம், குழு பதிவிற்கு ரூ.7,200-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,400-ம் கட்டண தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
அங்ககச்சான்று பண்ணை பதிவு மற்றும் சான்றளிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தொலைபேசி எண் 0431-2420133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அங்ககச் சான்றட்டைகளை கலெக்டர் சிவராசு வழங்கினார்.