திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ.வெள்ளனூரில் ரயிலில் அடிபட்டு நகராட்சி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லால்குடி அருகே இ. வெள்ளனூர் அண்ணா நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் 34 வயதான பாலகிருஷ்ணன். தற்போது இவர் லால்குடியில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். பாலகிருஷ்ணன் லால்குடி நகராட்சி ஆணையருக்கு டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருடைய மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு அவருடைய அப்பா வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று தன் மனைவியை வீட்டுக்கு வருமாறு பாலகிருஷ்ணன் அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் பாலகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சல் அடைந்தார். இதனால் கோபத்தில் இருந்த பாலகிருஷ்ணன் தண்டவாளம் அருகே சென்ற போது சென்னை மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது மன உளச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.