திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார்
திருச்சி, ஜுன் 7 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பிரதான சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் 200 மீட்டர் தொலைவில் உள்ள வரவேற்பு அறைக்கு வர முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படும் நிலை உள்ளது. இதுபற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட ஆட்சியரின் நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக பேட்டரி கார் ஒன்றை வாங்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நிதி ஒதுக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது, புதிதாக பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி வாகனத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, துணைமேயர் திவ்யா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.